
விமான நிலையத்தில் பதிவான சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் SLBFE விளக்கம்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் ஒருவருக்கும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிக்கும் இடையே நடந்த உரையாடலைக் காட்டும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் காணொளி, 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது என்று பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்தக் காணொளியில், பெண் பயணிகள் சுற்றுலா விசாக்களில் தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அதிகாரி அந்த பெண்ணிடம் கூறுவது பதிவாகியுள்ளது. இந்த விடயம் இலங்கையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கமளித்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் தலைவர் கோசல விக்ரமசிங்க, இந்தக் குறிப்பிட்ட சம்பவம், மனிதக் கடத்தல் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிச் சம்பவங்கள் அதிகரித்ததன் காரணமாக இலங்கையர்கள் சுற்றுலா விசாக்களில் மியன்மார் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் நடந்தது என்று தெரிவித்தார்.
“அந்த நடவடிக்கைகளில் ஒன்றின்போதே இந்த உரையாடல் இடம்பெற்றது என அவர் மேலும் கூறினார்.
இந்த விவகாரம் வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலும் பேசப்பட்டது. இதன்போது, சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து தாம் விசாரிப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்தார்.
எவ்வாறாயினும், பின்னர் இது குறித்த விளக்கமளித்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம். சுற்றுலா விசாக்களில் வெளிநாடுகளுக்குச் சென்று, பின்னர் அங்கு வேலை பெறுவது தொடர்பாக ஆட்கடத்தலில் சிக்குவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.
