விமான நிலையத்தில் : சாக்லேட் பூசப்பட்ட ‘குஷ்” போதைப்பொருள் 7 வயது குழந்தையுடன் இந்திய தம்பதியினர் கைது
சாக்லேட் பூசப்பட்ட 20 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ என்ற கஞ்சா வகையை கடத்த முயன்ற இந்திய இளம் தம்பதியினர், ஏழு வயது குழந்தையுடன் இன்று வியாழக்கிழமை இலங்கை சுங்கத்துறையினரால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
இந்த தம்பதியினரும் குழந்தையும் தாய்லாந்தில் இருந்து திரும்பி இந்தியா செல்லும் வழியில் இலங்கைக்கு வந்தபோது விமானநிலைய வருகை முனையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தம்பதியினரின் கைப்பையில் இருந்து சுமார் 20 மில்லியன் மதிப்புள்ள ஒரு கிலோ 984 கிராம் (1,984 கிராம்) குஷ் கண்டுபிடிக்கப்பட்டது.
பாங்காக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் யூஎல் 403 இல் குறித்த தம்பதியினர் நாட்டிற்குள் வருகைதந்தனர், கொழும்பில் இரண்டு நாட்கள் கழித்த பின்னர் மீண்டும் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தனர்.
சிறிய பந்துகளின் அளவில் சுற்றப்பட்ட போதைப்பொருட்கள் பொலிதீனில் சுற்றப்பட்டு, சாக்லேட் பூசப்பட்டு மீண்டும் சாக்லேட்டுகள் போல தோற்றமளிக்க தங்கம் மற்றும் வெள்ளி படலத்தால் சுற்றப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் உள்ள மோப்ப நாய்களால் கூட போதைப்பொருளின் வாசனையை உணர முடியாத அளவுக்கு இது மிகவும் அதிநவீனமான முறையில் பொதி செய்யபட்டிருந்தாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், பாங்காக்கிலிருந்து இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு போதைப்பொருட்களை கொண்டு செல்ல ஒப்புக்கொண்டதாகவும் இதற்காக இந்திய ரூபாய் 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரியவந்தது.
குறித்த நபரிடம் போதைப்பொருளை ஒப்படைத்த பின்னர் சென்னையில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகள் மூலம் தொயவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்படடுள்ளனர்.