விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து: அதன் பாகங்கள் அகற்றப்பட்டன

வென்னப்புவ, லுனுவில பகுதியில் விபத்துக்குள்ளான விமானப்படையின் ‘பெல் 212’ (Bell 212) ரக ஹெலிகொப்டரின் பாகங்கள் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள, சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போது, முப்படையினர், பொலிஸ், தீயணைப்புப் பிரிவினர் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து, இலங்கை விமானப்படை விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை லுனுவில பாலத்திற்கு அருகில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த ஹெலிகொப்டர் கின் ஓயா (Gin Oya) ஆற்றுக்குள் விழுந்துள்ளது.

ஹெலிகொப்டரை பத்திரமாக தரையிறக்க விமானிகள் முயன்றபோதிலும், அது ஆற்றுக்குள் வீழ்ந்தது.

உள்ளூர் மக்களும், மீட்புக் குழுவினரும் உடனடியாகச் செயற்பட்டு ஹெலிகொப்டரில் இருந்த அதிகாரிகளை மீட்டனர்.

எனினும், 41 வயதான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய என்ற விமானியான சம்பவத்தில் உயிரிழந்தார்.