விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உயிரிழப்பு
-மூதூர் , கிண்ணியா நிருபர்கள்-
திருகோணமலை அனுராதபுர சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் (இலங்கை தமிழரசு கட்சி) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து திருகோணமலை அனுராதபுர சந்தியில் உள்ள விபுலானந்தா பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்றுள்ளது.
மூதூர் சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் வருகை தந்து பாதசாரிக் கடவையின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்விபத்தில் மூதூர் சம்பூர் பகுதியைச் சேர்ந்த கு.நாகேஸ்வரன் (வயது 71) என்பவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
