விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் பலி!

-யாழ் நிருபர்-

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

வேரவில் – பூநகரி பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரம் மௌதீஸ்வரன் (வயது 45) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 11ஆம் திகதி குறித்த நபர் வேரவில் பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது முழங்காவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கோட்டின் ஊடாக வலது பக்கம் திருப்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.

இந்நிலையில் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நள்ளிரவு 12 மணி அளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.