விபத்தில் சிக்கிய காரில் கைத்துப்பாக்கி, ரவைகள் மீட்பு

கொழும்பு – மாலபே பகுதியில் காரில் இருந்து 9மிமீ பிஸ்டல் மற்றும் தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

முல்லேரியாவ வீதியில் நேற்று இரவு திங்கட்கிழமை இடம்பெற்ற கார் விபத்து தொடர்பான விசாரணையின் போது இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற பின்னர் சாரதி தப்பிச்சென்றுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய காரை சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சோதனை மேற்கொண்ட நிலையில் குறித்த துப்பாக்கி மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேக நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதுடன் விபத்தைத் தவிர்க்கத் தவறியது, மதுபோதையில் வாகனம் செலுத்தியது மற்றும் உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்ததற்காக பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.