-மூதூர் நிருபர்-
கந்தளாய் பிரதான வீதியில் உள்ள 91ஆம் கட்டைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்து கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டி சாரதிக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த விபத்து, 91ஆம் கட்டை பாலத்துக்கு அருகில் இடம்பெற்றதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் வாத்தியகம பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த முச்சக்கர வண்டி, மூன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு மற்றுமோர் மாணவரை ஏற்ற கிராமத்துக்குத் திரும்ப முயன்றபோது, பின்னால் திருகோணமலைப் பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரும் பலத்த காயமடைந்துள்ள நிலையில், முச்சக்கர வண்டி சாரதி சிறு காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த மாணவர்கள் காயங்களின்றிப் பாதுகாப்பாக உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


