விபத்தில் ஆறு பேர் படுகாயம்

பலாங்கொடையில் இருந்து மடூல்சீமை நோக்கி பயணித்த லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மடூல்சீமை பட்டவத்தை தோட்டத்தில் உத்தியோகத்தர்களாக கடமை புரிபவர்கள், பலாங்கொடையிலுள்ள மரண வீடொன்றுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் சென்று, மீண்டும் மடூல்சீமை பட்டவத்தைக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளை, குறித்த லொறி பதுளை பசறை பிரதான வீதியில் பால்சபைக்கு அருகாமையில் பாலம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதன்போது, அறுவர் படுகாயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த லொறியில் 10 பேர் பயணித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.