விண்வெளியில் நடந்த எதிர்பாராத சிக்கல்
விண்கலத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக, ‘டியாங்கோங்’ விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட மூன்று சீன விண்வெளி வீரர்கள், மாற்று விண்கலம் வாயிலாக பூமிக்கு நேற்று வெள்ளிக்கிழமை பத்திரமாக திரும்பியுள்ளனர்.
பல்வேறு நாடுகளுடன் கூட்டாக சேர்ந்து அமெரிக்கா உருவாக்கிய ஐ.எஸ்.எஸ்., எனப்படும், சர்வதேச விண்வெளி நிலையத்தை தவிர, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களுக்கென பிரத்யேகமான தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கி நிர்வகித்து வருகிறது.
இந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்வதற்காக, ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்று முறையில் சீன விண்வெளி வீரர்கள் சென்று வருவது வழக்கம்.
அந்த வகையில், சீன விண்வெளி வீரர்களான சென் டோங், சென் ஜோங்ருய் மற்றும் வாங் ஜீ ஆகியோர், ‘ஷென்சோ – 20’ விண்கலம் வாயிலாக கடந்த மே 3ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டனர்.
அங்கு, ஆறு மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 5ஆம் திகதி பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர்.
அந்த நேரத்தில், அவர்கள் சென்ற விண்கலத்தின் மீது, விண்வெளி குப்பைகள் மோதியதில் சேதம் ஏற்பட்டது.
இதனால், அவர்கள் பூமிக்கு திரும்புவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
