விசேட அலகுக்குரிய ஆசிரியர்களுக்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சிநெறி
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட அலகுக்குரிய ஆசிரியர்களிற்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சி நேற்று சனிக்கிழமை மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கும் போது சாதாரண பிள்ளைகளுக்கு எவ்வாறான திட்டங்களை அரசாங்கத்தின் கொள்கைகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அதே அளவுக்கு மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும், இவ்வாறான சகல திட்டங்களும் அரசாங்கத்தினால் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றது என்றும், இந்த இலவசமாக வழங்கப்படுகின்ற திட்டங்களை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகளை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உள்ளது எனவும், முக்கியமாக விசேட பிரிவுக்குரிய ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும் மாற்றுத்திறனாளி பிள்ளைகள் தொடர்பான பல்வேறுபட்ட திட்டங்கள் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல் இன்றைய பயிற்சியில் வழங்கப்படும் என்பதையும் இப்பயிற்சி நெறியை சரியான முறையில் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஆரோக்கியமானதொரு சூழ்நிலையை நாம் எல்லோரும் சேர்ந்து உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அடுத்த நிகழ்வாக மாவட்ட இணைப்பாளர் சமூக சேவைகள் உத்தியோகத்தர் த. பிரணவன் அவர்கள் உரையாற்றும் போது சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு திட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பாக 06 மாதம் தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்களை புனர்வாழ்வு திட்டத்திற்கு உட்படுத்தி மருத்துவ குழுவினர் மூலம் பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம் என கூறினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளை தொழிற்பெயர்ச்சி நிலையங்களுக்கு அனுப்பும்போது அவர்களை வீட்டு மட்டத்தில் புணருத்தாபனம் செய்வது மிக முக்கியமான வேலை திட்டங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.
குறிப்பாக மாற்றுத்திறனாளி சிறுவர்களை வீட்டுமட்டத்தில் சரியான முறையில் புணருத்தாபனம் செய்வதன் ஊடாக தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கூடுதலான மாற்றுத்திறனாளிகளை தெரிவு செய்ய முடியும் எனவும் கூறினார்.
அடுத்ததாக திருகோணமலை மாவட்டத்தில் பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இப்பகல் நேர பராமரிப்பு நிலையத்துக்கு மாற்றுத்திறனாளி பிள்ளைகளை சரியாக தெரிவு செய்வதற்குரிய பொறுப்பு சகலருக்கும் உள்ளது எனவும் குறிப்பாக விசேட பிரிவுக்குரிய ஆசிரியர்கள் இதனை கருத்தில் கொண்டு இப்பராமரிப்பு நிலையத்தினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அடுத்ததாக மாவட்ட இணைப்பாளர் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மதுரன் அவர்கள் உரையாற்றும் போது மாற்றுத்திறனாளி பிள்ளைகளை சாதாரண கல்வி நிலைக்கு மாற்றும் போது கல்வி அமைச்சின் கொள்கைகளின் அடிப்படையில் NVQ சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது எவ்வாறு என்பதையும் இவ்வாறு NVQ சான்றிதழை பெற்றுக் கொள்வதன் மூலம் இலங்கையின் சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைக்கு சமனான வாய்ப்புகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறினார்.
மேலும் இலங்கையில் உள்ள தொழில் பயிற்சி நிலையங்களை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும் எனவும், NVQ ஒன்றிலிருந்து ஏழு வரை எவ்வாறான தொழில் பயிற்சிகள் எந்த நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் விரிவான விளக்கத்தை விசேட பகுதிக்குரிய ஆசிரியர்களுக்கு வழங்கினார்.