
விகாராதிபதியின் முறைப்பாட்டால் கைதான நபர் பிணையில் விடுவிப்பு
-கிண்ணியா நிருபர்-
காணி பிரச்சினை காரணமாக, மூதூர் 3ம் கட்டை மலை விகாரதிபதியால், மூதூர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக, கைது செய்யப்பட்ட அ.ரமேஷ் என்பவர் இன்று புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ரமேஷ் சார்பாக சிரேஸ்ட சட்டதரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் ஆஜராகினர்.
இதன் போது வாதங்களை முன்வைத்த சட்டதரணி துஷ்யந்தன்,
குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது. பலாத்காரமாக 2015 காலப்பகுதியில் ஆயுத படையினர் முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். பின் அவர்கள் அங்கிருந்து 2020 இல் வெளியேறும் போது பிறகு வந்து அச் சிலையை எடுத்து செல்வதாக கூறி சென்றனர் .
ஆனால் இன்றுவரை அது எடுக்கப்படாததால் அந்த இடத்தில் ரமேஷ் புத்தர் சிலையுடன் பிள்ளையார் சிலை வைத்து கடந்த 4 வருடங்களாக வழிபாட்டில் ஈடுபட்டார் . கடந்த பொசன் காலத்தில் விகாராதிபதி வந்து பிள்ளையார் சிலையை அகற்ற முயன்றார்.ரமேஷ் எதிர்த்ததால் அவரை பொலிஸார் கைது செய்து ஒப்படைத்துள்ளனர்.
இது மத சுதந்திரத்தை மீறும் செயல். இன முறுகலை ஏற்படுத்தும் செயல். எனவே எனது கட்சிக்காரரை விடுவிக்க கோருகிறேன், என தெரிவித்தார்
அதனை தொடர்ந்து நீதவான் ரமேஷ்க்கு பிணை வழங்கி, இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
