வாழைச்சேனையில் நீதி கேட்டு வழிபாட்டு ஆராதனை நிகழ்வு
-வாழைச்சேனை நிருபர்-
‘நீதியின் தேவனே வரவேண்டும் நிம்மதி எம் வாழ்வில் தரவேண்டும் ‘ எனும் தொனிப்பொருளில், வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிப சங்கத் தலைவர் ஞா.ஜோய் பிரகாஸ் தலைமையில் உயிர்த்த ஞாயிறு தினமன்று உயிரிழந்தவர்களின் இளைப்பாறுதலுக்கும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையால் அல்லலுறும் அனைத்து மக்களுக்காகவும் விடுதலை வேண்டி நீதியின் தேவனிடம் நீதி கேட்டு வழிபாட்டு ஆராதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிறிஸ்த்தவ பணிக்குழு பொறுப்பாளர் றோய்மாணிக்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச கிறிஸ்தவ திருச் சபைகளை இணைத்து இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கிறிஸ்தவ ஆண்மீக பாடல்களும், வேதாகம வசனங்களும் வாசிக்கப்பட்டு ஜெப ஆராதனைகளும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியில் இறந்தவர்களுக்காக நினைவு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் குறுத்துவ வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த கத்தோலிக்க அருட்பணியாளரான ஏ.அருளானந்தம் கலந்து சிறப்பித்து அருளுரை வழங்கினார்.
அத்துடன், ஏனைய திருச்சபை குருவானவர்களும் போதகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை வை.எம்.சி.ஏ. புதிய நிர்வாக சபை பொறுப்பேற்று அதனுடைய முதல் நிகழ்வாகவும் இந் நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.