வாள் வெட்டில் உயிரிழந்தவரின் பணத்தை திருடியவர் உட்பட மூவர் விளக்கமறியலில்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-பேதிஸ்புர பகுதியில் கடந்த 16ஆம் திகதி வாள் வெட்டில் உயிரிழந்த நபரின் பணம், அடையாள அட்டை மற்றும் ஏடிஎம் கார்ட் போன்றவற்றுடன் கைது செய்யப்பட்ட நபர் உட்பட மூவரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த அன்ராதென்னதிகே உஸான் மது சங்க (34 வயது) மற்றும் 05ம் கட்டை சுமேதங்கரபுர கே.ஆர். வீட்டுத் திட்டத்தில் வசித்து வரும் திசாநாயக்க முதியன்சலாகே காவிந்த திசாநாயக்க (28 வயது) ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்

இதே வேளை, நேற்று முன்தினம் திங்கட்கிழமை மற்றுமொரு சந்தேக நபர் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உஷான் மதுசங்க (34 வயது), வாள் வெட்டினால் உயிரிழந்தவருடைய சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்ற போது பின்னால் சென்றதாகவும், அங்கு சென்று அவருடைய பாக்கெட்டில் காணப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தையும், அவருடைய அடையாள அட்டை மற்றும் ஏடிஎம் கார்டை திருடியதாகவும், குறித்த நபரிடம் திருடப்பட்ட பொருட்களை மீட்டதாகவும் நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.