பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் (Paramount Skydance) நிறுவனம், Warner Bros(வார்னர் பிரதர்ஸ்). Discovery(டிஸ்கவரி) நிறுவனத்தை 110 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா உள்ளிட்ட 12 மாநிலங்களுடன் சமரசத் தீர்வை எட்டும் வாய்ப்பு இந்த வார இறுதியில் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் சமீப நாட்களில் முன்னேற்றம் கண்டுள்ளதாக இந்த விடயம் தொடர்பில் அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சாத்தியமான சமரசத்தின் ஒரு பகுதியாக CNN செய்தி உள்ளடக்கங்களை சுயாதீனமாக கண்காணிக்கும் ஏற்பாடு மற்றும் ஆண்டுதோறும் திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கைக்கு உறுதியளிப்பது உள்ளிட்ட நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இதுவரை எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை. கலிபோர்னியா நீதித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்களை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
Paramount–Warner Bros. இணைப்பு நிறைவேறினால் CNN, HBO, Harry Potter, DC மற்றும் பிற முக்கிய பொழுதுபோக்கு சொத்துக்கள் ஒரே நிறுவனத்தின் கீழ் வரும். இதனிடையே, ஒப்பந்தம் செப்டம்பர் 30ஆம் திகதிக்குப் பின்னரும் நிறைவு பெறாமல் தாமதமானால், Warner Bros. Discovery பங்குதாரர்களுக்கு நாளொன்றுக்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை Paramount நிறுவனத்திற்கு ஏற்படும். இதனால், சட்டத் தடைகளை நீக்குவதற்கான சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.










