வாட்ஸ்அப்பின் முக்கிய அம்சத்தில் பாதுகாப்பு சிக்கல்: பயனர்களுக்கு எச்சரிக்கை

வாட்ஸ்அப் தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாகும்.

புகைப்படங்கள் அனுப்புதல், அழைப்பு செய்தல், காணொளி, ஆவணங்கள் அனுப்புவது எனப் பல்வேறு அம்சங்கள் இந்த வாட்ஸ்அப்பில் உள்ளது.

இதில் ஸ்டிக்கர் அனுப்புதல் மட்டுமின்றி தற்போது பணம் அனுப்பும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

இதனிடையே வாட்ஸ்அப் ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் ‘View Once’ என்ற புகைப்படங்களை அனுப்பும் அம்சம் ஒன்றை அறிமுகம் செய்தது.

இதில் நீங்கள் ஒருவருக்குப் புகைப்படத்தை அனுப்பினால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்.

மீண்டும் அதனைப் பார்க்கவோ, வேறு யாருக்கும் பகிரவோ முடியாது.

ஆனால் இந்தத் தனியுரிமையை மையமாகக் கொண்ட அம்சம் ஒரு பெரிய பாதுகாப்புக் குறைபாட்டைக் கொண்டிருப்பதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Tal Beery என்ற பாதுகாப்பு ஆராய்ச்சியாளரே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் அனுப்பினாலும் ஒருவர் அந்தப் புகைப்படத்தைப் பார்ப்பது மட்டுமின்றி அதை அவர்களின் சாதனத்திலும் சேமிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்குத் தவறான தனியுரிமையை வழங்க முயற்சிப்பதை விட, அந்த அம்சத்தைத் தானே அகற்ற விடுவது சிறந்தது என்றும் Tal Beery சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ​​வாட்ஸ்அப்பின் ‘View Once’என்பது தவறான தனியுரிமையின் அம்சம் என்றும், இது நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக வாட்ஸ்அப் பயனர்கள் தாங்கள் ‘View Once’ அம்சத்தில் அனுப்பும் புகைப்படத்தைச் சேமிக்கவோ அல்லது screenshot எடுக்கவோ முடியாது என்று நம்புகின்றனர்.

ஆனால் உண்மையை அறிந்தால் இந்த அம்சத்தைத் தினசரி பயன்படுத்தும் பில்லியன் கணக்கானவர்களும் அதிர்ச்சியடைவார்கள்.

இந்த நிலையில், வாட்ஸ்அப்பின் அம்சத்தில் உள்ள சிக்கல்பற்றி Tal Beery மெட்டா நிறுவனத்திற்கு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அறிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்