வாசிப்பை ஊக்குவிக்க அதிரடித் திட்டம்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக முன்னெடுக்கப்படும் ‘அருணு தொர’ (Arunu Dora) தேசிய வாசிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடமாடும் நூலக வாகனங்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் கூடிய 10 நடமாடும் நூலக வாகனங்கள் மற்றும் 9,300 புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதற்காக ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயலகம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளதுடன், மேல் மாகாண சபையின் உள்ளூராட்சி திணைக்களம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

இந்த நூலக வாகனங்கள் கெஸ்பேவ, சீதாவகாபுர ஆகிய நகர சபைகளுக்கும் ஹோமாகம, தொம்பே, அத்தனகல்ல, மினுவாங்கொடை, வத்தளை, புலத்சிங்கள, வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பிரதேச மட்டத்திலான வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும், நூலக வசதிகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்வதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.