வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-அம்பாறை நிருபர்-

திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் மனு ஒன்றினை கைளித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தோல்வி அடைந்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் சகிதம் சென்று இன்று செவ்வாய்க்கிழமை குறித்த மனுவை கையளித்துள்ளார்

குறித்த மனுவில் திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என கோரி பல தரப்பினரிடம் தேசிய காங்கிரஸ் தலைவராக சென்று கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை என குறிப்பிட்டு தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டடுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதே வேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை தனக்கு தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் கைளித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் உறுதிப்படுத்தினார்.

மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்பட்டுள்ளன, மேலும் நாம் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை ஏற்று கொள்ளவில்லை, ஆனால் புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது, நாம் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று கொழும்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம், நீதிக்கான எமது போராட்டம் தொடரும், என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்