வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க விசேட தினங்கள் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்கள் வெளியாகியுள்ளன.

இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று புதன் கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.

இதன்படி, ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3 ஆகிய தினங்கள் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் தினங்களாக கருதப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமை தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் எனவும் பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்காளர் அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலகங்களில் இன்று புதன்கிழமை இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.