வாகரையிலிருந்து நஞ்சற்ற விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யத் திட்டம்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
சகல இயற்கை வளங்களும் சூழ்ந்துள்ள மட்டக்களப்பு வாகரைப் பிரதேசம் பின் தங்கிய பகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலைமையை தலைகீழாக மாற்றி அங்கிருந்து நஞ்சற்ற விவசாய உற்பத்திகளைச் செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவுக்கு திட்டங்களை வகுத்து மக்களுக்கு உதவி ஊக்கங்களை அளித்து வருகின்றோம் என விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் சமூக ஒருங்கிணைப்பாளர் பாலசிங்கம் முரளீதரன் தெரிவித்தார்.
வாகரைப் பிரதேசத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் அமுலாக்கம் செய்யப்படும் சமூ, பொருளாதா, கல்வி, சுகாதார, வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் நிருவாக அலுவலர் கே. நிர்மலா, சமூக ஒருங்கிணைப்பாளர் கே. லக்ஷானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சமூக ஒருங்கிணைப்பாளர் முரளீதரன், வாகரையிலிருந்து ஏழ்மை நிலையை இல்லாமலாக்கும் தூரநோக்குத் திட்டத்தில் அங்கிருந்து அந்த வறிய மக்களாலேயே நஞ்சற்ற இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளச் செய்து அவற்றை மட்டக்களப்பின் நகர்ப்பகுதிக்கும் மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டிக் கொண்டு அந்த ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார அபிவிருத்திகளை அடைந்து கொள்ள முடியும்.
அதேவேளை மண்புழு உற்பத்தி செய்து அதன் மூலமும் சேதன விவசாயத்தை விரிவாக்கம் செய்ய ஏற்கெனவே பிரதேசத்திலுள்ள விவசாயப் பண்ணையாளர்களுக்கு பயிற்சிகளும் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
விளைவிக்கப்படும் உற்பத்திகள் தரமானதாகவும், பெறுமதி சேர் நுட்பத்தைக் கொண்டதாகவும், சேதன உற்பத்திகளாகவும் நாமத்தைப் பதிப்பதற்கும் அதன் மூலம் சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் பங்குபற்றியோரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தன்னார்வத் தொண்டு நிறுவனமான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பின்தங்கிய, அடிமட்ட கிராம மக்களின் கல்வி, சுகாதாரம், போசாக்கு, தொழில்வாய்ப்பு, பெண்கள் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், நல்லாட்சி, சகவாழ்வு போன்ற விடயங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்து வருவதாகவும், வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்காக நீடித்து நிலைக்கும் வாழ்வாதார விவசாய செயல்திட்டங்களைத் ஆரம்பித்துள்ளதாகவும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்