வாகன விபத்து: தென்னிலங்கை சுற்றுலா பயணி பலி
-யாழ் நிருபர்-
தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் வந்தவர்களின் கார் மீது பட்டா ரக வாகன மோதியதில் பெண்ணொருவர் நேற்றையதினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதன்போது கம்பஹாவைச் சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே குசும்புஸ்பராணி (வயது – 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுற்றுலாவிற்காக கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் வந்துள்ளனர். இதன் போது தெல்லிப்பழை சந்திக்கும் தெள்ளிப்படை பொலிஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பட்டாராக வாகனமும் குறித்த காரும் மோதி விபத்து சம்பவித்தது.
இதன்போது படுகாயமடைந்த குறித்த பெண் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் அவர் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்