வாகன திருத்துமிடத்திலிருந்து ஒருமாத கைக்குழந்தை மீட்பு

பண்டாரவளை – அம்பேகொடயில் உள்ள வாகன திருத்துமிடத்தில் , கடிதத்தை எழுதி வைத்து விட்டு ஒருமாத கைக்குழந்தை ஒன்றை இன்று புதன்கிழமை நண்பகல் அளவில் கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிறந்து சுமார் ஒரு மாதம் மதிக்கத்தக்க கைக்குழந்தையை தூக்கி வந்த ஆண் ஒருவர், அதனை கைவிட்டுச் சென்றுள்ளார் என பொலிசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

வாகனம் திருத்தும் இடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்ட வாகன திருத்துமிட உரிமையாளர் குழந்தையை மீட்டு, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

கைக்குழந்தைக்கு அருகில் எழுதப்பட்டிருந்த கடிதத்தில் குழந்தையை விட்டுச் சென்றவர் சிறிது நேரத்தில் குழந்தையை மீண்டும் எடுத்துச் செல்ல வருவார் என்றும் அதுவரை குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தை வைத்திய பரிசோதனைகளுக்காக, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளது.