
வாகன இறக்குமதிக்கான புதிய வரி ஏப்ரல் முதல் அமுல்
இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியில் இருந்து சுங்கத் திணைக்களத்தால் 2.5 சதவீத புதிய வரி அறவிடப்படும். அதற்கமைய வாகனங்களின் விலை அதிகரிக்க கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் அரோஷ ரொட்றிகோ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில் முழு நாட்டுக்கும் தாக்கம் செலுத்திய தித்வா புயல் தாக்கம் பேரிடரினால் நாட்டின் சகல இறக்குமதி மற்றும் சேவை கட்டமைப்பும் முழுமையாக பாதிக்கப்பட்டது.
நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் வாகன இறக்குமதி மற்றும் முற்பதிவுக்கான கேள்வி சடுதியாக குறைவடைந்தது.இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களையும் சுங்கத்தில் இருந்து விடுவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
பேரிடர் நிலைமைக்கு பின்னர் நாடு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. வாகன இறக்குமதி மற்றும் வாகன கொள்வனவு முற்பதிவுக்கான கேள்வியும் உயர்வடைந்து நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் வாகன இறக்குமதிக்காக 2.5 சதவீத புதிய வரி சுங்கத்திணைக்களத்தால் அறவிடப்படும்.இதனால் வாகனங்களில் விலை மீண்டும் அதிகரிக்க கூடும் என்றார்.
