வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை!
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எந்தவிதத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரையில் அதற்கான சுற்றறிக்கையோ அல்லது ஆவணமோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.
அரசாங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய, வாகன இறக்குமதி தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தினால் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அறியமுடிகிறது.
வாகன இறக்குமதி கொள்கைக்கு அமைய எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான சாத்தியம் காணப்படவில்லை.
முதற்கட்டமாக ஜனவரி மாதம் பேருந்து மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்து, அந்நியச் செலாவணியில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதை அவதானித்து அதன் பின்னர் கட்டம் கட்டமாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
சுமார் இரண்டு வருடங்களுக்குள் அனைத்து வகையான வாகனங்களையும் நாட்டுக்கு இறக்குமதி செய்யும் வகையிலேயே திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியிடப்படவில்லை.
நாட்டின் தற்போதைய நிலையில், எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிப்பது சாத்தியமற்றது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே சுட்டிக்காட்டியுள்ளார்.