வவுனியாவில் பொலிஸாரால் நிகழ்ந்ததாக கூறப்படும் மரணம் குறித்து தீவிர விசாரணை
-வவுனியா நிருபர்-
பொலிஸாரினால் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்வாக, பிரேத பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி அந்தோணிப்பிள்ளை (வயது 58) என்ற நபர், ஜூலை 11ஆம் திகதி இரவு கிராமத்தில் உள்ள ஒரு மதுபான விற்பனை நிலையத்திற்கு அருகில், அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
அந்தோணிப்பிள்ளை ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை செருகியதால், அவர் விழுந்து இறந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பொலிஸார் மீது குற்றம் சாட்டினர்.
எனவே, இந்த மரணம் விபத்து அல்ல, கொலை என்பதால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக கைது செய்யுமாறு பிரதேச மக்கள் பொலிஸாரை கடுமையாக வலியுறுத்தினர்.
மரணம் குறித்த பிரேத பரிசோதனையை நடத்திய வவுனியா பதில் சட்ட வைத்திய அதிகாரி என்.எம்.டி.பீ. நாயக்கரத்னய, இராமசாமி அந்தோணிப்பிள்ளையின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் தொடர்ந்து ஆராயப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உடலில் புதிய காயங்கள் எதுவும் இல்லை எனவும், வலது காலில் பல வடுக்கள் மற்றும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டதாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான பகுப்பாய்விற்காக இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதய தசை (Cardiac Muscles) மற்றும் கரோனரியில் (Coronaries) இருந்து எடுக்கப்பட்ட திசு மாதிரிகள் நுண் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமசாமி அந்தோணிப்பிள்ளையின் மரணத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குழு பல பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதோடு, தாக்குதலில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர் தெரிவித்தார்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் இந்த சம்பவத்தை ஜோடித்து, தம்மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது