வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணிநேரத்திற்கு அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.