வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (05) மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது.
இன்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிறது. விவாதத்தின் பின்னர் மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு முன்னடுக்கப்படும்.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரையை கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கடந்த நவம்பர் 14 ஆம் திகதி 2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைத்ததுடன் 8 பேர் வாக்களிப்பதில் பங்கேற்கவில்லை.
118 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்துக்காக 17 நாள்கள் ஒதுக்கப்பட்ட போதிலும், நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் சபை அமர்வுகள் பல சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்டன.
இதேவேளை, சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க குறைநிரப்பு பிரேரணை ஒன்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
