வனவள திணைக்களத்தின் காணிகள் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு விடுவிப்பு

வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக 61 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் உட்பட கிராமிய பொருளாதார அமைச்சுக்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய வகையில் இந்த முறை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நேரடியாக கிராமிய பொருளாதார அமைச்சினூடாக, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது, வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கீழ் உள்ள காணிகளை மீண்டும் விவசாயம், சுற்றுலாத் துறை மேம்பாடு மற்றும் மக்கள் குடியிருப்புத் தேவைகளுக்காக அடர்ந்த காடுகள் அற்ற பகுதிகளை விடுவிப்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.