வட மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு
-முல்லைத்தீவு நிருபர்-
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ_க்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
இலங்கையிலிருந்து அடுத்த மாதத்துடன் தனது பணியை நிறைவு செய்து திரும்பவுள்ளதாக கனேடியத் தூதுவர் ஆளுநரிடம் தெரிவித்தார்.
இதுவரை அவர் வழங்கிய ஒத்துழைப்புக்கள் மற்றும் கனேடிய அரசாங்கம் கடந்த காலங்களில் மேற்கொண்ட உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகளவில் உள்ளமையை சுட்டிக்காட்டிய ஆளுநர், போர் காரணமாக ஆவணங்கள் அழிவடைந்தமை இதற்கு பிரதான காரணமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்தமையால் எழுந்துள்ள சவால்களை ஆளுநர் எடுத்துக்கூறினார்.
இதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு காண்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ஆளுநர், கனேடியத் தூதுவருக்கு விவரித்தார். இந்தத் திணைக்களங்களால் வடக்கு மாகாணம் மாத்திரமல்ல ஏனைய பிரதேசங்களிலும் பாதிப்புக்கள் உள்ளதாக தாம் அறிந்திருப்பதாக கனேடியத் தூதுவர் பதிலளித்தார்.
2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இடைநடுவில் உள்ளமையால் மக்கள் இன்னமும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அந்த மக்கள் அதனை முழுமைப்படுத்துவதற்கு உதவிகள் தேவை எனக் கோரிக்கை விடுத்தார்.
அதேபோல பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுகின்றன என்றும் அவர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதற்கான உதவிகளை தேவை எனவும் கனேடியத் தூதுவருக்கு சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பு சவாலாக உள்ளது என்றும் இதற்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் விவசாய மற்றும் கடல் உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை இங்கு அமைப்பதற்கு முதலிடுவதற்கு கனேடிய வாழ் மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை முன்வைத்தார்.
வடக்கில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள முதலீட்டு வலயங்களின் முன்னேற்றம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கனேடியத் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.