
வட்டுக்கோட்டையில் பவித்திரன் படுகொலை: மேலும் ஒரு சந்தேகநபர் கைது
-யாழ் நிருபர்-
தவச்செல்வம் பவித்திரனின் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றையதினம் ஞாயிற்று கிழமை யாழ் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும் , அவரது மனைவியையும் பொன்னாலை பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து , வன்முறை கும்பல் ஒன்றினால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு , இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு , படுகொலை செய்யப்பட்டார்.
கடத்தி சென்ற இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு வன்முறை கும்பல் தப்பி சென்றது.
வன்முறை கும்பல் தம்மை வழிமறித்து ,தாக்கி கடத்த முற்பட்ட வேளை , தாம் உதவி கோரி கடற்படை முகாமிற்கு சென்ற வேளை அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டினர் எனவும் , தனது கணவரின் படுகொலைக்கு கடற்படையினரும் காரணம் என படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த நாட்களில் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
