வடமேற்கு லண்டனில் பாடசாலையில் கத்தி குத்து : 13 வயது சிறுவன் கைது

வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில், சக மாணவர்கள் இருவரை கத்தியால் குத்திய விவகாரத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 12:40 மணியளவில், பிரெண்ட் பகுதியில் உள்ள கிங்ஸ்பரி உயர்நிலைப் பாடசாலைக்கு அவசர அழைப்பின் பேரில் பொலிஸார் விரைந்தனர்.

அங்கு 13 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டான்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அதே இடத்தில் 12 வயது சிறுவன் ஒருவனும் கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது. படுகாயமடைந்த இரு மாணவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை நடத்திய 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றான். இருப்பினும், அடுத்த சில மணிநேரங்களில் பொலிஸார் அவனை மடக்கிப் பிடித்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தற்போது பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர்.

“இந்தத் தாக்குதலுக்கான பின்னணி குறித்து நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம். தற்போது வரை இது ஒரு பயங்கரவாதச் செயலாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.” புலனாய்வுப் பிரதானி லூக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் போது அந்த சிறுவன் “அல்லாஹு அக்பர்” என்று முழக்கமிட்டதாகச் சில சாட்சிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சுமார் 2,000 மாணவர்கள் பயிலும் இந்தப் பாடசாலையில் நடந்த இந்தச் சம்பவம், பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இது ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதல். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்,” என உள்துறைச் செயலர் சபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

“இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 101 என்ற எண்ணிற்கு அழைத்து பொலிஸாருக்கு உதவ வேண்டும்,” லண்டன் முதல்வர் சாதிக் கான் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.