வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், ‘நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்’ என்ற வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா இன்று செவ்வாய்கிழமை காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு எதிரே உள்ள வளாகத்தில் தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான கண்காட்சியையும், மாண்புமிகு ஜனாதிபதியுடன் இணைந்து ஆளுநரும் பார்வையிட்டார். அதனை முடித்துக்கொண்டு பிரதான நிகழ்வு மேடையை ஜனாதிபதி சென்றடைந்தார்.

ஆங்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

வடமாகாணத்தில் 16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதோடு, 2027ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை ஆகிய இடங்களை இணைத்து தென்னை முக்கோண வலயம் உருவாக்கப்படவுள்ளது.

இன்றைய நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புகள் அமைச்சின் செயலாளர் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், தென்னை பயிர்ச் செய்கை சபையால் நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அத்துடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புக்கள் அமைச்சர் சமந்த வித்தியாரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர் க.திலகநாதன் ஆகியோர் உரையாற்றினர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இறுதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரை நிகழ்த்தினார்.

அதனையடுத்து, நிகழ்வில் வைத்து 15 விவசாயிகளுக்கு பயன் உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. சிறந்த விவசாயிகளுக்கான சான்றிதழ்கள், விருதுகளும் வழங்கப்பட்டன. அத்துடன் உரமானியம், கயிறு உற்பத்திக்கான இயந்திரம் கொள்வனவுக்கான காசோலை, சிரட்டைக்கரி உற்பத்தியாளர்களுக்கான காசோலைகள் என்பனவும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்