வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
-வாழைச்சேனை நிருபர்-
‘கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
காந்தி பூங்காவில் ஒன்று கூடியவர்கள் உப்பில்லாத கஞ்சியினை அவ்விடத்தில் காச்சியதுடன் அதனை சிரட்டையில் கொண்டு வீதியினால் சென்றோர்கள் மற்றும் பஸ் தரிப்பிடங்களில் இருந்தோர்கள் என பலருக்கும் வழங்கினார்கள்.
அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
-மன்னார் நிருபர்-
மே-18 முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
-யாழ் நிருபர்-
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்திற்கு முன்னால் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் பானையில் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘கஞ்சி பகிர்வோம் வலி சுமந்த கதை பகிர்வோம்’ எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
-கிளிநொச்சி நிருபர்-
முள்ளிவாய்க்கால் கஞ்சி எனும் தொனிப்பொருளில் இன்று கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைவு கூறும் நாளாக மே 18அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மே 12திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 18ம் திகதி வரையில் குறித்த நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி கந்தசுசாமி கோவில் முன்னிலையில் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.