
வடக்கு,கிழக்கில் இன்று நிர்வாக முடக்கல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். அவருக்கு நீதிக் கோரியும், தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தியும், இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஆதரவு வழங்கியுள்ளனர்.
மேலும் போராட்டம் தொடர்பில், இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர், தெரிவிக்கையில் வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய கட்சிகள் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு எந்தவொரு கோரிக்கையினையும் தமது கட்சியிடம் முன்வைக்கவில்லை எனவும் எவ்வாறாயினும், பெரும்பாலான இடங்களில், முஸ்லிம் வர்த்தக சங்கங்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறினார்.
