வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி – அகழ்வாய்வுகள் மீண்டும் ஆரம்பம்
செம்மணிப் புதைகுழியில் 150 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன, அகழ்வாய்வு மேலும் விரிவடைகிறது
நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி வளாகத்தில் 18 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் அகழ்வாய்வுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இலங்கையின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுகள் மீண்டும் நேற்று ஆரம்பமானபோது, ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய அகழ்வு தளத்தை விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் மேலும் மனித எலும்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான ஸ்கேன் பரிசோதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் உதவியுடன் ஓகஸ்ட் 4 மற்றும் 5, 2025 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய அகழ்வாய்வுப் பகுதிக்கு வெளியே மனித எலும்புகள் இன்னும் இருக்கலாம் என்பதற்கான புவியியல் ஆய்வின் மூலம் சான்றுகள் தெரியவந்துள்ளதால், அகழ்வாய்வுப் பணியைத் தொடர எட்டு வார கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளதாக, ஓகஸ்ட் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவானிடம் சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
32 நாட்கள் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சட்டத்தரணி ரணிதா குறிப்பிட்டார்.
அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட முதல் தளமான தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்றிலிருந்து 141 எலும்புக்கூடுகளும் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டிலிருந்து ஒன்பது எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மேலும் கூறினார்.