வடக்கிலுள்ள மனித புதைகுழிகள் குறித்து விசாரணைகள் இன்றி நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாரில்லை

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டு காணாமல் செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிரழசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இந்தநிலையில், சிறிதரனின் கோரிக்கைக்கு பதிலளித்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த விடயம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுமென உறுதியளித்தார்.

அத்துடன், வடக்கிலுள்ள பல மனித புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் இன்றி நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மண்டைத்தீவில் உள்ளதாக கூறப்படும் மனித புதைகுழிகள் தொடர்பான தகவல் அடிப்படை அற்றவை.

எனினும், திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் Carbon dating Test எனப்படும் கதிரியக்க கரிம காலக்கணிப்புக்காக அமெரிக்காவின் புளோரிடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டார்.