வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா மோசடி
நுகேகொடை பகுதியிலுள்ள ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட திலகரட்ன மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப்பிரிவுக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய விசாரணை அதிகாரிகள், முறைப்பாட்டாளர் காணி விற்பனைக்காக இணையத்தில் விளம்பரம் செய்ததாகவும், அதனைக் கொள்வனவு செய்யும் போர்வையில் சந்தேக நபர் முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் கணனி தரவு அமைப்பு மூலம் முறைப்பாட்டாளரின் வங்கிக் கணக்கிற்குள் நுழைந்து நாற்பது இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தனக்கு நெருக்கமான மற்றுமொரு குழுவினருடன் இணைந்து இந்த மோசடி சம்பவத்தைச் செய்துள்ளதாகவும், மோசடியாகப் பெறப்பட்ட பணம் சந்தேகநபரின் ஐந்து வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றுக்கு வழங்கிய தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.
கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளின் சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதால் சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்