வங்காள விரிகுடா அரபிக் கடல் பிராந்தியங்களைப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பிராந்தியங்களைப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற் பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால், மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை,குருநாகல், மாத்தளை, நுவரெலியா, இரத்தினப்புரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சபரகமுவ, மத்திய தென்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
