லொஹான் ரத்வத்தவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின் படி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், லொஹான் ரத்வத்த முன்னாள் சிறைச்சாலைகள் அமைச்சராகப் பதவி வகித்தமையினால் அவருக்கு விசேட பாதுகாப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சுவாசக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகச் சிறைச்சாலை வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தநிலையில், சிகிச்சையின் பின்னர் வைத்தியரின் சிபாரிசுக்கு அமைய அவர் சிறைச்சாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.

கண்டி – கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, நுகேகொடை – கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்