லொரியுடன் பேருந்து மோதி கோர விபத்து

நாரம்மல – குருநாகல் பிரதான வீதியில் நாரம்மல நகரில் லொறியொருவற்கும் பேருந்து ஒன்றுக்கும் இடையே ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக நாரம்மல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குருநாகல் நோக்கி நாரம்மலையிலிருந்து பயணித்த லொறி ஒன்று, ஓட்டுநரால் கட்டுப்படுத்த முடியாமல், பாதையின் வலது பக்கம் விலகி, கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த ஓட்டுநர், ஒரு ஆண், இரு பெண்கள் மற்றும் இரு குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்து, நாரம்மலை மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, லொறியில் பயணித்த ஓட்டுநர், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 41, 80 மற்றும் 82 வயதுடைய பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், அதே லொறியில் பயணித்த 40 வயது பெண் ஒருவர், 16 வயது மற்றும் 9 வயது பெண் குழந்தைகள் இருவர் குருநாகல் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாரம்மலை பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.