‘லேசர் கதிர்வீச்சு’ மூலம் மழைப்பொழிவு சோதனை வெற்றி

அபுதாபி தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு அமீரக மழை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்திய ஆய்வில், லேசர் கதிர்வீச்சுத் தொழில்நுட்பம் மூலம் செயற்கை மழைப்பொழிவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக, மழைப்பொழிவுக்கு இரசாயனங்களைப் பயன்படுத்தி மேகங்களைக் குளிர்வித்து மழை பொழிய வைக்கும் ‘கிளவுட் சீடிங்’ முறை அமீரகம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் இதற்கு ஒரு மாற்றுத் தீர்வாக, லேசர் கதிர்வீச்சு மூலம் மழையைத் தூண்டும் புதிய வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது.

இதுநாள் வரை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வடிவில் மட்டுமே இருந்த இந்த புதிய வழிமுறை, தற்போது அமீரக ஆய்வகத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதற்குச் சக்திவாய்ந்த அல்ட்ரா ஷார்ட் லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பாலைவனப் பகுதிகள் அல்லது மலைப்பாங்கான பகுதிகளில் பொருத்தப்பட்ட கருவிகளிலிருந்து இந்தக் கதிர்கள் வெளியேறும்.

இந்த லேசர் கதிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜன், ஒக்ஸிஜன் போன்ற வாயுக்களைச் சிதைத்து, நுண் துகள்களை (மின்னேற்றம் செய்யப்பட்ட அயனிகள்) உருவாக்கும்.

இந்த அயனிகள், காற்றில் உள்ள நீராவித் துகள்களை ஈர்த்து, மழைத்துளிகள் உருவாக ‘நியூக்கிளியஸ்’ (கரு) போல செயல்படும்.

ஆய்வக சோதனையில், லேசர் கதிர்கள் நீர்த்துளிகளை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அடுத்த கட்டமாக, அமீரகத்தில் உள்ள ஹஜார் மலைத்தொடர் உட்படப் பல்வேறு பகுதிகளில் நடமாடும் லேசர் கதிர்வீச்சுக் கருவிகளைப் பயன்படுத்தி, மேகங்களில் மழையைத் தூண்டும் நடைமுறைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், கிளவுட் சீடிங் முறையுடன் லேசர் கதிர்வீச்சுத் தொழில்நுட்பமும் இணைந்து அமீரகத்தில் மழைப்பொழிவை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.