லண்டன் லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் கார் மோதியதில் 27 பேர் காயம்

லண்டன் – லிவர்பூல் நகர மையத்தில் திங்கட்கிழமை இரவு நடந்த பிரீமியர் லீக் வெற்றி அணிவகுப்பின் போது, ரசிகர்கள் கூட்டத்திற்குள் கார் மோதியதில் 27 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

நெரிசலான தெருவின் இருபுறமும் பாதசாரிகள் மீது வாகனம் வேகமாகச் சென்று மோதிச் செல்வதை சமூகவலைதள காட்சிகள் காட்டுகின்றன. இச்சம்பவம் தொடர்பில் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த 53 வயது பிரிட்டிஷ் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 27 பேர் ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், இதில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் , இருவர் பலத்த காயமடைந்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

வெற்றி அணிவகுப்பில் அதிகளவிலான மக்கள் பங்கேற்பார்கள் என்பதினை கருத்தில் கொண்டு ஏற்கனவே பல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தமையினால் காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடிந்ததாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.