இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலோசியத்தில் இடம்பெற்ற பணியிட விபத்தில் 22 வயதான தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தை இத்தாலி கலாசார அமைச்சும் கொலோசியம் தொல்லியல் பூங்காவும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆண்ட்ரியா மொரெட்டி என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், கொலோசியத்தில் புதிய மின்விளக்கு அமைப்பை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 10 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். அவசர மருத்துவப் பணியாளர்கள் அவரை காப்பாற்ற முயன்ற போதிலும், அவர் உயிரிழந்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து இடம்பெற்ற கொலோசியத்தின் இரண்டாவது தளப் பகுதி அன்றைய தினம் பொதுமக்கள் பார்வைக்காக மூடப்பட்டது. விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழுமையான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தாலி கலாசார அமைச்சர் அலெசாண்ட்ரோ ஜியூலி, இந்த மரணம் தங்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்து, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.










