ரோபோ சங்கரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 

தமிழ் திரையுலகிலும் சின்னத் திரையிலும் நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் உடல் நலக் குறைவால் இன்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கல்லீரல். சிறுநீரகம் நோயால் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

மு.க.ஸ்டாலின் – தமிழ்நாடு முதலமைச்சர்
திரைக்கலைஞர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கிஇ சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வப் பெருந்தகை – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மக்களின் இதயத்தில் நிலைத்து நின்ற நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனது இயல்பான கலை வெளிப்பாட்டாலும், எளிமையான வாழ்வியலாலும் அவர் மக்களின் அன்பை பெற்றுச் சென்றார்.

நயினார் நாகேந்திரன் – பாஜக மாநிலத் தலைவர்
நடிகர் ரோபோ சங்கர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை திறனால் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை கவலையில் இருந்து மீட்டவர். இவரது மறைவு, திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்! அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!

தமிழிசை சௌந்தர்ராஜன் – முன்னாள் ஆளுநர்
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கமல்ஹாசன் – மநீம தலைவர்
ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே. ஏன இரங்கல் தெரிவித்துள்ளனர்.