ரொசல்ல – ஹட்டன் இடையிலான வனப்பகுதியில் தீ விபத்து

-மஸ்கெலியா நிருபர்-

ரொசல்ல மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில், புகையிரதப் பாதைக்குக் கீழே அமைந்துள்ள ஸ்டதன் (Staden) பகுதியிலுள்ள வனப்பகுதியொன்றில் நேற்று சனிக்கிழமை மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை 5:30 மணியளவில் ஆரம்பமான இந்தத் தீ, பிரதேசத்தில் நிலவும் கடும் வரட்சி மற்றும் காற்று காரணமாக வேகமாக பரவியுள்ளது.

தற்போது வரை இந்தத் தீயினால் சுமார் மூன்று ஏக்கர் வனப்பகுதி அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் எவராவது வனப்பகுதிக்குத் தீ வைத்திருக்கலாம் எனப் பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்ட போதிலும், தீயிற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. தீயைக் கட்டுப்படுத்துவதற்குப் பிரதேசவாசிகள் முயற்சி செய்து வருவதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சட்ட விரோதமாக இவ்வாறு பற்றைகாடுகள் மற்றும் வனப் பகுதிகளுக்கு தீ வைப்போர்களை கண்டால் உடனே அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கும் படி கேட்டுக் கொள்ள படுகின்றனர்.