ரொக் பொஸ்பேற் பெறுமதி சேர்க்கும் திட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்
-கிண்ணியா நிருபர்-
கப்பல்துறை பிரதேசத்தில் உள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு உரிய 100 ஏக்கர் காணியில் லங்கா பொஸ்பேற் கம்பனியால் அகழ்வு செய்யப்படும் ரொக் பொஸ்பேற் பெறுமதி சேர்க்கும் திட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பங்கேற்க கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி திருகோணமலை மாவட்டத்துக்கு வருகை தந்தார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ஜே. எம். திலகா ஜயசுந்தர வரவேற்புரையாற்றி, கூட்டத்தின் நோக்கத்தை விளக்கமாக எடுத்துரைத்தார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கப்பல்துறைப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபையின் 100 ஏக்கர் காணியில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தனது கருத்தை இதன்போது தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் இணைந்து காணி அனுமதி, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் , நீர் மற்றும் மின்சாரம் வழங்கல், சுற்றுச்சூழல் நிலைமைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.
மாவட்ட கைத்தொழில் குழுவுடன் தொடர்புடைய பல பிரச்சினைகள் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் குழுவும் கப்பல்துறை நிலப்பரப்பை பார்வையிடும் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் இணைந்து கொண்டனர்.
இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் திருமதி எஸ்.டபிள்யூ.சி. ஜெயமினி மற்றும் டபிள்யூ.ஏ.எம். மல்காந்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் திருமதி. சதுரி. ஆர். மாமுஹேவா உள்ளிட்ட பல துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.