ரூ.71,000 வேண்டுமா? இதைச் சாப்பிடுங்கள்!
துணிக்கடைகள் முதல் உணவகங்கள் வரை வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக விதவிதமாக தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வார்கள் உரிமையாளர்கள். சுவைகளில் வித்தியாசம் காண்பிப்பது ஒருபுறம் இருந்தாலும் தற்போது ஒரு சமோசாவை 12 கிலோ எடைக்கு தயார் செய்து வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு இனிப்பகம்.
இந்தியா – உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் இனிப்பகம் ஒன்று இயங்கிவருகிறது. இங்கு தயார் செய்யப்படும் பல இனிப்புகள் மக்களிடம் பிரபலமாகியுள்ள நிலையில், மேலும் வாடிக்கையாளர்களைத் தன் வசம் கொண்டுவருவதற்காக சுமார் 12 கிலோ எடைக் கொண்ட சமோசாவை தயார் செய்துள்ளது. மேலும் இந்த சமோசாவை 30 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடித்தால் ரூ.71,000 பரிசுத் தொகை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான அறிவிப்பைப் பார்த்த வாடிக்கையாளர்கள் என்ன தான் இதில் புதுமையான விஷயம் உள்ளது என்பதை அறிந்துக் கொள்வதற்காக இதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இனிப்பகத்தில் தயார் செய்யப்படும் சமோசாவை மக்களிடம் விற்பனைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக செய்ய முடிவெடுத்தோம் என்கிறார் இக்கடையின் உரிமையாளர் கவுஷல். முதலில் 4 கிலோ எடையுள்ள சமோசா, 8 கிலோ எடையுள்ள சமோசா செய்துள்ளனர். இவை இரண்டும் மக்களிடம் பிரபலமான நிலையில் தற்போது நாங்கள் 12 கிலோ எடைக் கொண்ட சமோசாவைத் தயார் செய்கிறோம்.
மேலும் இதை மக்களிடம் பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக, 12 கிலோ சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிடுவோருக்கு ரூபாய் 71,000 பரிசுத்தொகை என அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கிறார் இந்த இனிப்பகத்தின் உரிமையாளர். இந்த அறிவிப்பையடுத்து அதிகளவில் வாடிக்கையாளர்கள் இந்த பாகுபலி சமோசாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதோடு மட்டுமின்றி பிறந்த நாள் விழா போன்ற முக்கிய விசேஷங்களுக்குக்கூட பாகுபலி சமோசாக்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனராம். இதுவரை 40-50 மெகா சைஸ் பாகுபலி சமோசாக்களை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்துள்ளார்கள் என்கின்றனர் இக்கடையின் உரிமையாளர். மேலும் இணையத்திலும் இந்த சமோசா பிரபலமாகிவிட்ட நிலையில், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமா? என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
12 கிலோ எடைக் கொண்ட சமோசாவில் உருளைக்கிழங்கு, பட்டாணி, வாசனைப் பொருள்கள் போன்ற பொருள்களின் எடை மட்டும் 7 கிலோவாகும். இந்த அளவிற்கு பெரிய சமோசாவை செய்வதற்கு சமையல் கலைஞர்கள் 6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அதில் இந்த பிரமாண்ட முக்கோண வடிவத்தை எண்ணெயில் பொரிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என கடை உரிமையாளர் தெரிவிக்கிறார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்