ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டதை இரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதேவேளை கடந்த பொதுத் தேர்தலின் போது களுத்துறை மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணும் செயல்பாட்டில் ஏற்பட்ட முறைகேடுகளே, தாம் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுத்ததாக மனுதாரரான ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தார்.

களுத்துறை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 119 வாக்குகள் மட்டுமே என்றும், முறைகேடுகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்கவும், கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில், புதிய ஜனநாயக முன்னணியின் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணவும், புதிய முடிவுகளை வெளியிடவும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தை கோரியிருந்தார்.