ராஜஸ்தானில் பேருந்து பயணிகளுக்கு நேர்ந்த துயரம்

ராஜஸ்தானில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 20 பேரின் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குளிர்சாதன படுக்கை வசதியுடன் கூடிய தனியார் பேருந்து, நேற்று 57 பயணிகளுடன் புறப்பட்டது.

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின் பக்கத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை வீதி ஓரமாக நிறுத்தினார்.

ஆனால் சில விநாடிகளில் பேருந்து முழுவதும் தீ பரவியதுடன் பேருந்தைச் சுற்றி கடும் புகைமூட்டம் ஏற்பட்டதாக மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அருகே உள்ள இராணுவ முகாமிலிருந்த இராணுவ வீரர்களும் அப்பகுதி மக்களும் விரைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்த முழு தகவல்கள் தற்போதுவரை வெளிவராத நிலையில், பேருந்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பற்றி இருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.