ராஜபக்ஷ சகோதரர்கள் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நாட்டில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த, ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின், பெரும்பான்மையான நீதியரசர்களின் தீர்மானத்துக்கமைய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொழிலதிபர்களுக்கு 681 பில்லியன் ரூபாய் வரி விலக்கு அளிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதுவே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பிரச்சினை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் தாமதம் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியின் போது 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மைப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட தவறான பொருளாதார நிர்வாகப் பிரச்சினைகளையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த மனுவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஹிம் மெண்டிஸ், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ஜூலியன் போலிங், ஜெஹான் கனகரத்ன மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை, மனுதாரர்களுக்கு தலா 150,000 ரூபாவை நட்டயீடாக வழங்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.