
ராஜபக்ச அரசாங்கம் தமது அதிகாரத்தை பயன்படுத்தி என்னை மிக பயங்கரமாக பழிவாங்கி விட்டது
-வாழைச்சேனை நிருபர்-
அரசியல் அதிகாரம், அரசியல் ஊழல், நிலச் சுரண்டல், வளச் சுரண்டல், தமிழின அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்த தன்னை இராஜபக்ச அரசாங்கம் அவர்களுடைய அதிகாரத்தினை பயன்படுத்தி மிக பயங்கரமாக பழிவாங்கிவிட்டதாக மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டபோது ஊடகவியலாளர்களால் அவரது விடுதலை தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கும்போது,
என்னிலை வந்தாலும் எங்கள் தமிழ் உணர்வாளர் அமைப்பு தன்னிலை மாறாது அடக்கு முறைகளுக்கெதிராக தார்மீகப் போராட்டம் நிச்சயமாக தொடரும் 15 மாதங்கள் சிறைச்சாலை வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டோம், ஆகவே சிறைச்சாலை அடக்குமுறையை பற்றி எள்ளளவேனும் கவலைப்பட போவதில்லை.
எங்களுடைய தமிழருடைய அடக்கு முறைக்கெதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பு தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும்.
ராஜபக்ச அரசாங்கம் தங்களது எதிரிகளை அடக்குவதற்காகவும் தங்களுக்கெதிரானவர்களை சிறையில் அடைப்பதற்காகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை தற்போது நடைமுறையில் வைத்துள்ளனர்.
எந்த சிங்கள அரசியல் தலைவர்கள் வந்தாலும் தமிழர்களுக்கு ஜனநாயகம் கிடைக்காது, என தமது கருத்தினை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆண்டு இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை, சட்டமா அதிபரின் ஆலோசனையில் நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத், ஒரு இலச்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு பிணையிலும் பிணையில் விடுவித்துள்ளார்.
இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ம் திகதி அவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கபபட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஒரு வருடம் 3 மாதங்கள் கடந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவரே மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களின் விடுதலை செய்யப்பட்ட இறுதி கைதியுமாவார்.
விடுதலை செய்யப்பட்டவரை அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக அழைத்து பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்.
